(81) குறையாத மவுசு!
மனிதனுக்கு மட்டுமே கிடைத்த மிக அற்புத உணர்ச்சி நகைச்சுவை. ஆயுள் கூட்டும் அற்புத மருந்து என்றே கூட நகைச்சுவையைச் சொல்லலாம்.
நான் எடுத்த நகைச் சுவைப் படங்கள் மக்களிடம் மிகுந்த வரவேற்பைப் பெற்றன. இன்றைய சூழலின் நெருக் கடிகளிலிருந்து மக்களை சில மணி நேரங்களாவது ஆற்றுப்படுத்த வேண்டிய அவசியம் படைப்பாளி களுக்கு ஏற்பட்டிருக்கிறது. அதனால்தான் நான் நகைச்சுவைப் படங்களின் பக்கம் திரும்பியுள்ளேன்.
என்னுடைய "காவி, ஆவி, நடுவுல தேவி' -இந்தப் படம் காலதாமதமானதற்கு ஒரு காரணம் யோகிபாபு. பாதி படம் முடிந்ததும், உடல்நலம் சரியில்லாமல் இருந்த காரணத்தால் படப்பிடிப்புக்கு போவதில்லை. அதனால் படத்தை காட்டச் சொன்னேன்... படம் பார்த்தேன். தம்பி ராமையா முக்கியமான கதாபாத்திரம். ஆனால் அதில் பெரிதாக காமெடி வரவில்லை. கதைக்கு ஏற்ற கதாபாத்திரம், பெருசா நகைச்சுவை பண்ணமுடியாது. சிரிப்பை வரவைக்க அந்த கதாபாத்திரத்தை பயன்படுத்தினால், படக்கதை தடுமாறும். ஆகவே "ஆவி' கதாபாத்திரத்தில் நடிக்க வேறு ஒரு நடிகரிடம் பேசியிருந்தனர். அந்த நேரத்தில் யோகிபாபு வளரும் நடிகர். பல படங்களில் நடித்துக்கொண்டிருந்தார். அவரை போடச் சொன்னேன். என் நண்பர் ரியாஸை வரவழைத்து, யோகிபாபுவிடம் பேசவைத்து அவர் மூலம் ஐந்து லட்சம் முன்பணமும் அனுப்பி வைத்தேன். அப்போதே அவர் என் படத்துக்கு ஆறு மாதங்கள் கழித்தே மொத்த நாட்களையும் சேர்த்துத் தரமுடியும் என்றார், சம்மதித்தேன்.
அவருக்காக "ஆவி' கதாபாத்திரத்தை பெரிதாக மாற்றி நகைச்சுவைக் காட்சிகளையும் இணைத்தோம். காத்திருந்து படப்பிடிப்பில் அவரோட காட்சிகளை முடித்தோம். டப்பிங் வர மேலும் மூன்று மாதங்கள் ஆயின. பொறுத்திருந்து ஏவி.எம்.மில் டப்பிங்கையும் முடித்தோம். அன்றுதான் நான் அவரை நேரில் சந்தித்தேன். அன்றே அடுத்த படத்துக்கு ஆறு லட்சத்துக்கான காசோலையையும் கொடுத்தேன். அதன்பின் நாங்கள் நல்ல நண்பர்களானோம். அடிக்கடி என்னைப் பார்க்க வருவார். இந்தப் படத்தை "ரிலீஸ்' செய்த பின்னால் "தேனிலவில் மனைவி எங்கே?' என்ற படத்தை அவரோடு ஆரம்பிப்பேன்.
என்.எஸ்.கே. காலத்திலிருந்து நான் எல்லா நகைச்சுவை நடிகர்களோடும் பணியாற்றியிருக் கிறேன். தங்கவேலு, சந்திரபாபு, பாலையா, எம்.ஆர்.ராதா, சாரங்கபாணி, டி.ஆர்.ராமச்சந்தி ரன், நாகேஷ், சுருளிராஜன், தேங்காய் சீனிவாசன், வி.கே.ஆர்., வடிவேலு, பாண்டிய ராஜன், மணிவண்ணன் போன்ற அனைவருட னும் பணியாற்றியுள்ளேன்.
"காசி யாத்திரை', "பாட்டி சொல்லை தட்டாதே', "மைனர் மாப்பிள்ளை', "அட்ரா சக்கை... அட்ரா சக்கை', "மனைவிக்கு மரியாதை', "பேத்தி சொல்லை தட்டாதே' போன்ற பல படங்களை எடுத்துள்ளேன்.
தற்போது "காவி, ஆவி, நடுவுல தேவி', அடுத்து "தேனிலவிலே மனைவி எங்கே?'. முன்பு நல்ல குடும்பக் கதைகளை எடுத்துவந்த நான், தற்போது சமூகத்தைப் பார்க்கிறேன். மக்கள் படும்பாடு... குறிப்பாக ஒர்க்கிங் கிளாஸ் அல்லல்படுகிறார்கள். பொருளாதார பிரச் சினை, உணவுப் பிரச்சினை, வேலையின்மை, சமூக ஏற்றத்தாழ்வுகளின் இடைவெளிப் பெருக்கம், பாதுகாப்பின்மை, ஸ்திரத்தன்மை எதிலும் இல்லாதது என பல பிரச்சினைகள். அவர்களை இன்னும் வேதனைப்படுத்த விரும்பாமல், நகைச்சுவைப் படங்கள் பக்கம் திரும்பியுள்ளேன். முடிந்தவரை சிரிக்க வைக்கலாம். "காவி, ஆவி, நடுவுல தேவி' தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய நாலு மொழிகளிலும் தயாரித்துள்ளேன்.
நான் எடுத்த "முந்தானை சபதம்' படத்தில் நகைச்சுவையுடன் சமூகக் கருத்துக்களை கலந்து சொல்லியிருந்தேன். இந்தப் படம் வெற்றிகர மாக ஓடியது. இதில் மனோரமாவின் பாத்திரப் படைப்பை துணிச்சலான பெண்மணியாகவும், பெரியாரின் கொள்கைகளை பின்பற்றும் பெண்மணியாகவும் சித்தரித்திருந்தேன்.
"குறைந்த செலவில் எடுக்கப்பட்ட தரமான படம்' என "முந்தானை சபதம்' படத்தை தேர்வு செய்து ஏழு லட்ச ரூபாய் மானியமும் வழங்கியது தமிழக அரசு.
"முந்தானை சபதம்' படத்தை இப்போது பார்த்த தயாரிப்பாளர்கள் தெலுங் கிலும், இந்தியிலும் மறு ஆக்கம் செய்ய விருப்பம் தெரிவித்துள்ளார்கள். கதையை லேட்டஸ்ட் ட்ரெ ண்டுக்கு ஏற்ப திருத்தம் செய்து எழுதித் தரச் சொல்லியிருக்கிறார்கள்.
"முந்தானை சபதம்' கதை என்ன?
மனோரமாவுக்கு இரண்டு பேத்திகள். மூத்தவளை பெண் பார்க்க வந்த மாப் பிள்ளை வீட்டார், "விரைவில் நல்ல பதில் சொல்வதாக' சொல்லிவிட்டுப் போக... பெண்ணிடம் அவளது தாய்மாமனோ, "மாப் பிள்ளை மோசமான ஆள்' என போலி ஆதாரங்களுடன் குற்றம் சுமத்த, "இந்த மாப்பிள்ளை வேண் டாம்' என பெண் சொல்கிறாள். உண் மையை அறிய நினைக் கும் பெண்ணின் தங்கையோ, "நான் எப்படியாவது மாப் பிள்ளை வீட்டுக்குள் போய்... துப்பறிந்து உண்மையைக் கண்டுபிடிக்கிறேன்' எனச் சொல்லிவிட்டு மாப்பிள்ளை வீட்டுக்கு வருகிறாள். அவனின் பெற்றோர் நோயாளிகள் என்பதை அறிந்து நர்ஸ் வேஷத்தில் உள்ளே நுழைகிறாள். மாப்பிள்ளையின் நல்ல குணங்களை அறிந்த அவள், "அக்காவுக்கு பார்த்த மாப்பிள்ளை' என்பதையும் மறந்து அவன்மேல் காதல் கொள்கிறாள்.
வீட்டுக்கு வந்து விஷயத்தைச் சொல்கிறாள். குடும்பத்தில் பிரச்சினை. தங்கை தற்கொலைக்கு முயல... பாட்டி மனோரமாவும், அக்காவும் காப்பாற்றி அவள் விரும்பிய வாழ்க்கையை அமைத்துத் தருவதாக உறுதி கூறுகிறார்கள். அதை நிறைவேற்ற மனோரமா சபதம் ஏற்கிறார்.
இந்நிலையில்... இந்த குழப்பங்களிலிருந்து விடுபட மாப்பிள்ளை வேலை தேடி நகரத்திற்கு வருகிறான். இதையறிந்து பாட்டியும் தன் இளைய பேத்தியை அழைத்துக்கொண்டு நகரத்திற்கு வருகிறாள்.
நகரத்தில் கல்லூரிப் பேராசிரியராக வேலை செய்யும் மாப்பிள்ளை மீது கல்லூரி பிரின்ஸ்பல் மேடத்துக்கு காதல் உண்டாக...
இறுதியில்... மாப்பிள்ளையை மணந்தது யார்? முந்தானை சபதம் நிறைவேறியதா? என்பதை எதிர்பாராத திருப்பங்களுடனும், நகைச்சுவையுடனும் எழுதியிருந்தேன்.
சுமார் 35 வருடங்களுக்கு முன் எனது கதை வண்ணத்தில் உருவான இந்தப் படத்தை இப்போது ரீ-மேக் செய்ய விரும்புகிறார்கள் என்றால்... நகைச்சுவை கதைகளுக்கு எப்போ துமே ஒரு மாஸ் இருக்கத்தான் செய்கிறது.
ஜெய்சங்கரை, ஜெய்சங்கருக்குத் தெரியாமலே "அடுத்த எம்.ஜி.ஆர்.' ஆக்குவதற்கு நடந்த முயற்சிகள்...
(திரை விரியும்)
படம் உதவி: ஞானம்